Saturday, September 25, 2010

ஷிர்க்கின் தீய விளைவுகள்...

தௌஹீதுக்கு (ஏகத்துத்துக்கு) முற்றிலும் எதிரான செயலாக கருதப்படுவது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும்.
                 
                    அல்லாஹ்வை வணங்குவதோடு, வணங்குவதற்கு இன்னொரு கடவுளை கொண்டு வருதல் அல்லது வழிப்படுவதற்கு வைத்து அவனது படைப்புகளாலும் செய்ய முடியும் என கருதுவது அல்லது அல்லாஹ் அல்லாத சக்திகள் மீது அன்பு செலுத்துவது, உதவி தேடுவது போன்றன இணை வைத்தலை குறிக்கின்றன.

     அல்லாஹ்வுக்கு இணை வைப்பது மிக பாரதூரமான குற்றமாகும். ஏனைய குற்றம் புரிவொருக்கு கிடைக்கும் மன்னிப்பு கூட இணை வைப்பவர்களுக்கு அறவே கிடையாது. அல்லாஹ் தன் திரு மறையில் கூறுகிறான்,

"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்"[திருக்குர்ஆன் 4:48]
                
இணை வைப்பவர்கள் ஒரு போதும் சுவர்க்கம் செல்ல முடியாது. இதனை பின்வரும் அல் குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.

"எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை" [திருக்குர்ஆன் 5:72]
         
இணை வைத்தல்" எனப்படுகின்ற இப் பெரும் பாவத்தை செய்வோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந் நல்லறங்களும் அழிந்து போய் விடும்.
'
'நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்"" (என்பதுவேயாகும்)" [திருக்குர்ஆன் 39:65]         


ஒரு சிலர் இன்று ஷிர்க் என அறியாத நிலையில் சில பாவங்களில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக மந்திரித்தல், நூல் வளையம் கட்டுதல்,  தாயத்து அணிதல் என்ப‌வற்றை குறிப்பிடலாம். இவை சிறிய வகையான ஷிர்க்கில் அடங்கினாலும், பெரும் பாவங்களை விட பாரதூரமான குற்றாமாகவே கருதப்படுகின்றன.

"எவராயினும் ஒரு துஆ கூட்டை அல்லது தாயத்தை அணிந்துக் கொண்டால் தன் நாட்டத்தை அல்லாஹ் பூர்த்தி செய்வதை அவர் ஒரு போதும் காணமாட்டார். எவரேனும் ஒரு கடல் சங்கை தொங்கவிட்டுக் கொண்டால் அவர் ஒரு போதும் ஓய்வும், சாந்தியும் பெறமாட்டார்" என நபி (ஸல்) கூறியதாக உக்பா பின் ஆமிர் தெரிவித்தார். ஆதாரம் அஹ்மத் (இப்னு ஹம்பல்)


நபி (ஸல்) அவர்களின் இன்னுமொரு ஹதீஸின்படி, "யாரேனும் ஒரு தாயத்தை அணிந்து கொண்டால், அவர் ஒரு ஷிர்க்கான காரியத்தை செய்து விட்டார்", என்று கூறியிருக்கிறார்கள்.


கையில் (மந்திரம் ஓதிய) ஒரு நூலை கட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட ஹுதைபா (ரலி) அவர்கள் அதனை வெட்டியெரிந்து [12:106] குர்ஆன் ஆயத்தை ஓதிக் காட்டியதாக இப்னு அபி ஹாதிம் அறிவிக்கிறார்கள்.


அல்லாஹ் தன் திரு மறையில் குறிப்பிடுகிறான்,

                                       "அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால் அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக் கூடியவையா? அல்லது ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால் அவனுடைய அருளை அவை தடுத்துவிடக் கூடியவையா? என்று நீர் கேட்பீராக. அல்லாஹ் எனக்கு போதுமானவன். (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறுவீராக" [திருக்குர்ஆன் 39:38]
                 
இன்று வயிற்றுப்பிழைப்பிக்கு வழியில்லாதவர்கள் அல் குர்ஆனிய வசனங்களை வைத்து "மந்திரம்" எனும் பெயரில் வியாபாரம் நடத்துகின்றனர்.  இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை பின்வரும் ஹதீஸ் கண்டிக்கிறது.

குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள். (நபிமொழி, அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அசாகிர்)

ஏமாறுபவர்கள் உள்ள வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
எனவே எத்தகைய பயனையும் தராத, பாவத்தையும் அல்லாஹ்வின் கோப‌த்தையும், தீய விளைவுகளையும் மட்டுமே பெற்றுத்தரக்கூடிய இத்தகைய ஷிர்க்கான விடயங்களை விட்டு விலகி நடக்க அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வானாக!!!
ஆமீன் !!!

                  

No comments:

Post a Comment